ads

Friday, April 4, 2014

செல்லப்பிள்ளை – திரைக்கதை முயற்சி



செல்லப்பிள்ளை திரைக்கதை முயற்சி




அது ஒரு வசதியான கூட்டுக்குடும்பம். குடும்பத்தலைவருக்கு நான்கு பிள்ளைகள். முதலில் 2 ஆண்பிள்ளைகள். பிறகு ஒரு பெண். கடைசியாக ஒரு ஆண்பிள்ளை. அவன் பெயர் பிரகாஷ். பெயருக்கு ஏற்றாற்போல் அவன் முகம் எப்போதும் பிரகாசமாக சிரித்த முகத்துடன் இருக்கும். அவனை பெரியவரின் பேரனா என்று பார்ப்பவர்கள் கேட்கும்விதமாக, பெரியவருக்கு காலம் கடந்து பிறந்த பிள்ளை அவன். அவனை தவிர உடன்பிறந்தவர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உண்டு.
அவன் அந்த வீட்டின் செல்லப்பிள்ளை. அந்த கூட்டுக்குடும்பத்தின் குழந்தைகளுக்கு அவன்தான் ஹீரோ. அவன் அவர்களுக்கு கதைகள் சொல்லி மகிழ்விப்பான். மிமிக்ரி செய்தும், பாட்டு பாடியும், நடனம் ஆடியும் அவர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் செல்வான். அவன் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
இப்படியிருக்கும்போது அவனுக்கு ஒரு மோசமான பழக்கம் ஒட்டிக்கொள்கிறது. அது, மது அருந்தும் பழக்கம். மது கொஞ்சம் கொஞ்சமாக அவனை அடிமையாக்கிவிடுகிறது.
குடிகாரர்களின் செயல்கள் வெறுப்பை வரவழைத்தாலும், சில சமயங்களில் அவர்களின் ஏடாகூடமான செயல்கள் சிரிப்பை வரவழைத்துவிடும். இவ்வாறாக மிமிக்ரி, பாட்டு, கூத்து, காமெடி என முக்கால்வாசி நேரம் நகரும் திரைக்கதை, அதன் பிறகு சிரீயஸ் ஆகிவிடுகிறது.
தண்ணீர் தன்னுள் மூழ்கியவனை மூன்று முறை தூக்கிவிட்டு காப்பாற்ற முயற்சிக்கும் என்று சொல்லப்படுவதுபோல, அந்த கூட்டுக்குடும்ப அமைப்பு, போதை ஆற்றில் விழுந்த அவனை, அவனது மது பழக்கத்தால் விளைந்த மூன்று பெரும் இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றுகிறது. இருந்தும் அவன் திருந்தியபாடில்லை.
குடிப்பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவன் பாதியிலேயே அதை முடித்துக் கொண்டு, மீண்டும் குடிக்க ஆரம்பித்து விடுகிறான்.
வீட்டிலிருக்கும் பொருட்களைத் திருடி விற்பது, பித்தளை பாத்திரங்களைத் திருடி விற்று குடிப்பது, கந்து வட்டிக்கு கடன் வாங்கி குடிப்பது என அவன் குடிப்பழக்கத்திற்கு முழுமையாக அடிமையாகிறான்.
குடும்பத்தினரை ஒருகாலத்தில் மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்ற அவனே, அவர்களை வெறுப்பின் எல்லைக்கும் கொண்டு செல்கிறான்.
ஒரு கட்டத்தில் அவன், குடும்பத்திற்கு பாராமாகிப் போவதோடு, சமூகத்திற்கும் இடைஞ்சலாகிப் போகிறான். மனம் வெறுத்த குடும்பத்தினர், விரக்தியின் உச்சத்திற்கு செல்கிறார்கள்.
பேசாமல் அவனுக்கு சோற்றில் விஷம் வைத்து கொன்று விடலாம்…” என்று பெரியவர் அடிக்கடி புலம்புகிறார்.
குடிப்பழக்கத்தால் அவன் உடல்நிலை மிகவும் மோசமாகி விடுகிறது. இனிமேல் குடித்தால் அவன் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவன் அதனை பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் ஒருநாள் பிரகாஷ் தெருவில் நடந்து செல்லும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. மினி லாரியில் ஏற்றப்பட்டு, வெளியே துருத்திக்கொண்டிருக்கும் இரும்புச்சட்டம் ஒன்று அவன் தலையில் பலமாக மோத, அவன் நினைவிழக்கிறான்.
அந்த விபத்து அவனை ஒரு மனநோயாளியாக்கிவிடுகிறது. அவன் மிகவும் அப்பாவித்தனமாக நடந்து கொள்கிறான்.
பிறரிடம் பேசாமல் இருக்கும் அவன், ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் பேச வாயைத் திறக்கிறான். வயிறு பசித்தாலும், வாயைத்திறந்து சோறு போடுமாறு கேட்கவே தயங்குகிறான். தொலைக்காட்சியில் அவன் கவனம் செலுத்தும்போது, வேண்டுமென்றே தொலைக்காட்சி அணைக்கப்பட, அவன் அது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவனை யாராவது அடித்தாலும் அவனுக்கு கோபப்படத்தெரியவில்லை. அவன் கண் முன்னால் பணம் வைக்கப்பட, அவன் அதை சட்டை செய்யாமல் இருக்கிறான். பணத்தை கண்டால், உடனே அதைத்திருடி மது குடிப்பவனிடம் இப்படி ஒரு மாற்றம் நிகழ, அனைவருக்கும் சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா என தெரியவில்லை.

இப்போது அவனுக்கு ஒரே நேரத்தில் உடலுக்கும், மனதுக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது.
மனோதத்துவ டாக்டர்களிடம் காண்பிக்கும் போது, குடிப்பழக்கத்தால் கெட்டுப்போன உடல்நிலை சரியான பிறகே, மனநிலையை சரி செய்ய இயலும் என உறுதியாகக் கூறிவிடுகின்றனர்.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?
இவ்வாறு மனநல சிகிச்சைக்கு சகல வசதிகளும் இருந்தாலும், அது தாமதப்படுகிறது.
காலம் அந்த கூட்டுக்குடும்பத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் ஒருசில மாதங்களுக்குப் பிறகு, வீட்டை விட்டு வெளியே செல்லும் அவன், காணாமல் போகிறான். பல மாதங்களாக அவனை தேடியும் எந்த பலனும் இல்லை.
அவன் ஒரு மோசமான குடிகாரனாக, காணாமல் போயிருந்தால், எல்லோரும் தொல்லை விட்டது என்று நிம்மதியாக இருந்திருக்கலாம்... ஆனால் அவன் யாருக்கும் துன்பம் தராத, அப்பாவி மனநோயாளியாக காணாமல் போய் விட்டானே…” என்று பெரியவர் மிகுந்த வேதனையோடு புலம்புகிறார்.
ஒருவர் இறந்துவிட்டால், அதனால் ஏற்படும் வருத்தம் காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால் ஒருவர் காணாமல் போய்விட்டால், அவர் வீடு திரும்பாத வரையில், அந்த வருத்தம், காலம் காலமாக, ஆறாத வடுவாக மனதில் நிலைத்து விடும்.
அதன்பிறகு பிரகாஷ் வீடு திரும்பவே இல்லை.
எல்லாருடைய வெறுப்பிற்கும் ஆளானாலும், பிரகாஷ் இறுதியாக எல்லாருடைய மனதிலும் செல்லப்பிள்ளையாக நிலைத்து வாழ்கிறான்.

துடிப்பான ஜாலியான இளைஞன், குடிகாரன், மனநோயாளி என நடிப்பில் பல்வேறு பரிமாணங்களை காட்டக்கூடிய வாய்ப்பை நாயகனுக்கு அளிக்கும் திரைக்கதை இது.
 
குறிப்பு : விஜய் டி.வி, 'அது இது எது' புகழ் ஜெயச்சந்திரன் நன்றாக நடிக்கிறார். குறிப்பாக குடிகாரராக பிரமாதமாக நடிக்கிறார். அவருக்கு என் வணக்கமும், வாழ்த்துக்களும்... (H)Over 1, 2, 3...



No comments:

Post a Comment

Blogger Widgets