ads

Sunday, February 9, 2014

Memento மெமென்டோ கதை என்ன?





மெமென்டோ கதை என்ன?

(Memento story)

(Great story. Gets better every time you tell SEE it.)




தமிழில் கஜினி திரைப்படம் உருவாக, இந்த ஆங்கிலத் திரைப்படமும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கக் கூடும்.
லென்னி (LEONARD SHELBY) என்பவர் ஒரு Insurance Investigator. ஒருநாள் அவர், தன் மனைவியுடன் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. அதில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிடுகிறது (Short term memory loss). அவரால் எதையும் பத்து நிமிடங்களுக்கு மேல் நினைவில் வைத்து கொள்ள முடிவதில்லை என்பதே அந்த பாதிப்பு.
உடல்ரீதியான பாதிப்பு இல்லை என்ற காரணத்தால், அவர்களுக்கு இன்சூரன்ஸ் மறுக்கப்படுகிறது.
வேறு நிரந்தர வருமானம் இல்லை என்ற காரணத்தாலும், மனநிலை பாதிக்கப்பட்ட கணவனை கவனிக்கவேண்டிய கடுமையான பொறுப்பால் உண்டாகும் அலுப்பாலும், தனக்கு இருக்கக்கூடிய சர்க்கரை வியாதியாலும், விரக்தியடையும் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்ள திட்டமிடுகிறாள். அதற்கு தனது கணவனுக்கு இருக்கும் மனநிலை பாதிப்பையே சாதகமாக்கிக் கொள்கிறாள்.
அவர் அவளுக்கு இன்சுலின் ஊசி போடுவது வழக்கம். அவரது மறதி நோயை பயன்படுத்தி, அவள், மிகக்குறுகிய காலத்தில், அவரை மீண்டும் மீண்டும் பலமுறை தனக்கு இன்சுலின் ஊசி போடச் செய்து, தற்கொலை செய்து கொள்கிறாள்.
தன்னுடைய கணவனது குழப்பமான மனநிலை உண்மைதானா என உறுதியாக தெரிந்துகொள்ள அவளால் மேற்கொள்ளப்படும் கடைசி முயற்சியாகவும் அந்த சம்பவம் அமைகிறது.
அவளது மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கணவனே மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடுகிறானோ என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அவர்களில் டெடி என்ற நயவஞ்சக போலீஸ்காரரும் ஒருவர்.
இதற்கிடையே காதல் மனைவியை இழந்து, அனாதையான லென்னிக்கு, வாழ்க்கை பெரும் சவாலாக இருக்கிறது.
 தன் மனைவி இறந்துவிட்டாள் என்ற உண்மையை அவரால் நினைவில் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அவரது மனம் அவரது மனைவியை தேடிக்கொண்டே இருக்கிறது.
 லென்னியின் குழப்பமான மனநிலையை உண்மையென உறுதிப்படுத்தியபின், போலீசார் அவரை அரசு மனநல காப்பகத்தில் சேர்க்கின்றனர்.
 பார்க்கும் அனைவரிடமும் தன்  மனைவி எங்கிருக்கிறாள் என்று பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை, திரும்பத்திரும்ப கேட்டு பாடாய்ப் படுத்துகிறார்.
மனைவியின் மரணத்திற்கு அவரே ஒருவகையில் காரணமாகிவிட்ட விந்தையை போலீசாரும், டாக்டர்களும் அவரது கதை அறிந்தவர்களும், அவரிடம் திரும்பத்திரும்ப  சொல்கின்றனர்.
அவரைப் பற்றிய முழுவிவரம் தெரியாதவர்கள் அவரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கின்றனர்.
இதற்கிடையில் டெடி அவரை தன்னுடைய தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு அவரை தந்திரமாக மனநல காப்பகத்தைவிட்டு வெளியே கொண்டு வந்து விடுகிறார்.
டெடி, லென்னியை ஒரு விடுதியில் தங்க வைத்து பராமரிக்கிறார்.
லென்னியின் மனம் தன் மனைவி எங்கே என தேடிக்கொண்டே இருக்கிறது. டெடி உண்மையைச் சொல்ல, அவர் மனமோ அதை ஜீரணிக்க மறுக்கிறது.
இப்போது அவரது வாழ்க்கை மிகச்சிறியது.
ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒருமுறை, தன் மனைவியின் இறப்பிற்கு தானே ஒருவகையில் உதவியதை அறிந்து வருத்தம் கொள்வதே அவரது வாழ்க்கை.
ஒரு கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் தெரிந்து கொள்வதே அவரது மொத்த வாழ்க்கை ஆகிறது.
இந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுபட, அவர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள முடிவெடுக்கிறார்.
தன் மனைவியின் முடிவை, தன் கடந்த கால நினைவில் இருக்கும் சேமி ஜாங்க்கிஸ் என்ற ஏமாற்றுப் பேர்வழியின்  மனைவியின் முடிவாக கற்பனை செய்து கொண்டு போலியான ஆதாரங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, தனது இடதுகை கட்டை விரலுக்கு அருகில் Remember Sammy Jankis என்று பச்சை குத்திகொள்கிறார்.
இவ்வாறு ஒரு கசப்பான உண்மையிலிருந்து அவர் தப்பித்து விட்டாலும், அவரது மனைவி எங்கே என்ற அவரது தேடல் எஞ்சி நிற்கிறது.
இந்நிலையை டெடி தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறான்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும், அந்த முயற்சியில் உருவாகும் எதிரிகளைக் கொல்லவும், லென்னியை டெடி, வஞ்சகமாக பயன்படுத்தத் திட்டமிடுகிறார்.
அதற்காக டெடி, ஜான்ஜி என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார்.
லென்னி மனநிலை பாதிப்படையவும் (Short term memory loss), அவரது மனைவி கற்பழித்து கொல்லப்படவும் காரணமாக இருந்தவரே  ஜான்ஜி என்று, போலியான ஆதாரம் ஒன்றின் மூலம் லென்னியை நம்பச்செய்கிறார் டெடி.
இவ்வாறு லென்னியின் மனதில், திரும்பத்திரும்ப எழும் மனைவியைப்பற்றிய கேள்விக்கு, அந்த போலியான ஆதாரங்கள், தவறான வழி காட்டுகின்றன.
மேலும் டெடி, தான் மனதில் நினைப்பதை, லென்னி செய்து முடிக்க (Inception) சில வழிகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.
லென்னியுடன் தொலைபேசியில் பேசுவது, போலியான ஆதாரங்களை லென்னிக்கு கிடைக்கச் செய்வது, லென்னிக்கு உதவும் நண்பராக தன்னை கூறிக்கொள்வது ஆகியவையே அவை.
லென்னி, தன் மனைவியை கொன்றவனை பழி வாங்கப்போவதாக உறுதியெடுத்து, அந்த உறுதியை தன் உடம்பில் பச்சை குத்திக்கொள்கிறார். இப்போது லென்னி, டெடி காட்டும் நபரை, தன் எதிரி ஜான்ஜி-யாகக் கருதி கொலை செய்யும் ஒரு தற்காலிக மனநிலையில் இருக்கிறார்.
    இவ்வாறு டெடி, லென்னி மூலமாக ஒருவரை கொலை செய்கிறார். பிறகு வழக்கம்போல் தனது மறதி நோய் காரணமாக லென்னி, தான் ஒரு கொலை செய்ததையே மறந்துவிடுகிறார்.
    சிறிது காலம் கழித்து, தனது ரகசியங்களைத் தெரிந்த,  ஜிம்மி என்ற தன் கூட்டாளியையே கொலை செய்ய, டெடி, லென்னியை அதே முறையில் பயன்படுத்துகிறார்.
 லென்னியால் தாக்கப்படும் ஜிம்மி, தான் லென்னியின் முழுக்கதை அறிந்த நபர்தான் என்ற விஷயத்தை அவருக்கு உணர்த்தும்விதமாக, இறப்பதற்கு முன்பு சேமி என்று முணுமுணுக்க, லென்னிக்கு குழப்பம் எழுகிறது. டெடியின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு அவரைத் தாக்குகிறார் லென்னி.
   அவரது நம்பிக்கையைப் பெற, வேறு வழியின்றி, டெடி, லென்னியைப் பற்றிய அனைத்து உண்மைகளை சொல்லவேண்டியதாகி விடுகிறது.
    இப்போது லென்னி குழப்பத்தில் தவிக்கிறார்.
  தான் சந்திப்பவர்களில், முக்கியமானவர்களை, உடனடி புகைப்படம் எடுத்து, அவர்களைப்பற்றிய குறிப்புகளை அவர்களின் புகைப்படத்தின் பின்னால் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர் அவர்.
அதனால், டெடியின் மீது ஏற்படும் அவநம்பிக்கையை, டெடியின் புகைப்படத்தின் பின்னால் எழுதிக்கொள்கிறார்.
தன்னை தவறான நபரை கொல்ல வழிநடத்திய, டெடியை கொன்றாலும் தப்பில்லை என்று அவர் நினைக்கிறார். ஜிம்மியை கொன்றதன் மூலம், தன்னுடைய பழி வாங்கும் படலம் முடிந்துவிட்டதாக நினைத்து, அவர் உருவாக்கிய புகைப்பட ஆதாரங்களை, அவரே அழித்துவிடுகிறார்.
(லென்னியின் ஞாபகங்கள் மூளையோடு தொடர்புடையது அல்ல. ஆதாரங்களோடு தொடர்புடையது. அதனால் அவர் நம்மைப்போல் அல்லாமல், ஞாபகங்களை அழிக்கவும்வல்ல திறன் படைத்தவராக இருக்கிறார். கதையின் சுவாரஸ்யமான பகுதியே இதுதான்.)
இப்போது அவரது பழி வாங்கும் படலம் மீண்டும் துவங்குகிறது. அவர் பழி வாங்க வேண்டிய  நபர் டெடிதான் என்று மறைமுகமாக ஒரு ஆதாரத்தை உருவாக்கிக் கொண்டு, அவர் அவ்விடம் விட்டு நகர்கிறார்.
  டெடிக்கு இப்போது சிக்கல் ஆரம்பமாகிறது. ஜிம்மியிடமிருந்து அபகரித்த பணத்தையும், லென்னியின் நம்பிக்கையையும் அவன் இழந்துவிடுகிறான்.
    பிறகு லென்னி, ஜிம்மியின் பணம், கார் உட்பட அனைத்து உடைமைகளையும் பயன்படுத்திக்கொள்கிறான்.
    ஜிம்மியின் உடைமைகளில் உள்ள குறிப்பின்படி அவனது காதலி நடாலியை சந்திக்கிறான்.
 லென்னி தன்னுடைய மறதி மனநிலையை அவளிடம் விளக்க, அவள் அதனை ஒரு அருவருக்கத்தக்க பரிசோதனை முடிவிற்குப்பிறகு, உண்மை என அறிந்து ஏற்றுக்கொள்கிறாள்.
    தனது காதலன் ஜிம்மி, டெடியால் தந்திரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்து  கொள்ளும் நடாலி, அதே  தந்திரத்தை பயன்படுத்தி டெடியை கொலை செய்ய முடிவெடுக்கிறாள்.
   டெடி, அப்பாவி மனநோயாளியான லென்னியை, பலகாலமாக நயவஞ்சகமாக பயன்படுத்தி வருவதை அவள் நன்கு புரிந்து கொள்கிறாள்.
    தனக்கு வாழ்வில் அச்சுறுத்தலாக இருக்கும் டாட் என்பவனை, தன் வாழ்விலிருந்து அப்புறப்படுத்த அவள், லென்னியை தந்திரமாக நாடகமாடி பயன்படுத்திக் கொள்கிறாள்.
  இதற்கிடையில் லென்னி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக, தனது விடுதி அறைக்கு ஒரு விலைமாதுவை அழைத்து வந்து ஒரு நாடகம் போடுகிறார். பிறகு அவர் குற்றமுள்ள நெஞ்சோடு, தன் மனைவியை நினைவுபடுத்தும், அவளது பொருட்களையெல்லாம் தீயில் போட்டு எரிக்கிறார்.
  பிறகு அவரால் பழி வாங்கப்பட வேண்டிய ஜான்ஜி, டெடிதான் என்று லென்னி நம்பும் விதமாக, அவரிடம் ஒரு ஆதாரத்தை கொடுக்கிறாள் நடாலி.
  லென்னி டெடியை, தனது மனைவியைக் கொன்ற எதிரி ஜான்ஜி-யாகக் கருதி கொலை செய்கிறார்.
 தன் வினை தன்னைச் சுடும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, டெடி, லென்னியின் மனதில், செயற்கையாய் வலிந்து விதைத்தபழி வாங்கும் உணர்ச்சி’, அவனுக்கே எமனாகிவிடுகிறது.
    இந்த திரைப்படம் ஒரு சுவாரஸ்யமான பெரிய விடுகதை விளையாட்டை விளையாடும் திருப்தியைத் தருகிறது.

   

 




Blogger Widgets