ads

Thursday, February 6, 2014

காதோடுதான் நான் பேசுவேன் - அனுபவம்



காதோடுதான் நான் பேசுவேன்



ஒருமுறை மாநகராட்சி நீச்சல் குளத்தில் நீச்சல் பழகச் சென்றிருந்தேன். மறுநாளில் இருந்து இடது காதில் இரைச்சல் ஆரம்பமானது. இடைவிடாத இரைச்சல். நின்றால், நடந்தால், படுத்தால்... இரைச்சல்... இரைச்சல்...
நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. டி.வி பார்க்கமுடியவில்லை. இரைச்சலுக்கு என்ன காரணம்? எனக்குள் பலத்த யோசனை. காதிற்குள் நீச்சல்குள நீர் புகுந்து, கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கலாமோ? காது குடையும்போது புண் ஏற்பட்டு, சீழ்பிடித்து இருக்குமோ?
ஒரு வாரம் தொடர்ந்தது இந்த தொந்தரவு.
காது இரைச்சல் எப்படி இருக்குமென்று கேட்கிறீர்களா? உங்கள் இடதுகை சுண்டுவிரலை இடது காதிற்குள் நுழைத்து இருபது வினாடிகள் ஆடாமல், அசையாமல் அழுத்தி வைத்திருங்கள். கேட்கிறதா மெல்லிய இரைச்சல்? இதைவிட சற்று அதிகமாகவே இருக்கும்.
பிறகு காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் சென்றேன். காதில் ஒரு கருவி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, வெள்ளையாக எதையோ எடுத்துக் காட்டினார் அவர். பிறகு மருந்துவிட்டார். வேறு எதையும் அவர் சொல்லவில்லை. உடனே காதில் இரைச்சல் நின்றுவிட்டது.
நினைத்துப்பாருங்கள் ஒருவாரமாக நிம்மதியை கெடுத்து பெரும்தலைவலியாய் இருந்த காது இரைச்சல், சட்டென்று நின்றுபோனால் எப்படி இருக்கும்? எனக்கென்னவோ ஏதோ புதிய காதை வாங்கி வைத்துக்கொண்டதுபோல ஒரு உணர்வு.
“Happy New Ear” - என்று ஆர்பாட்டமாக கத்தி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடலாம் போலிருந்தது.
 ரி, விஷயத்திற்கு வருகிறேன்.
ஜலதோஷம் பிடித்திருக்கும் வேளையில், மூக்கின் ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு, மற்றொரு துவாரம் வழியாக சளியை அழுந்த சிந்தும்போது, சளி வெளியேறாத நிலையில், சளி உட்புறமாக காதிற்குள் சென்றுவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. இதுவே எனது காது இரைச்சலுக்கு காரணம். பின்னாளில் நாளிதழ் வாயிலாக தெரிந்துகொண்ட விஷயம் இது.
அன்றுமுதல் மூக்கை முழு அழுத்தத்தோடு பலமாக சிந்தும் பழக்கத்தை விட்டுவிட்டேன். மருத்துவர்கள் நோய்க்கு மருத்துவம் பார்ப்பதோடு நின்றுவிடாமல், அந்நோய் உண்டாவதற்கான காரணங்களை விளக்கி, எதிர்காலத்தில் மீண்டும் நோய் வராமலிருக்க தகுந்த ஆலோசனைகளையும் வழங்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

Blogger Widgets