ads

Tuesday, February 11, 2014

பண வரவு - சிறுகதை



பண வரவு - சிறுகதை


என்ன சார், இன்றைய ராசி பலன் என்ன சொல்லுது?”
என்னோட ராசிப்படி பண வரவுன்னு போட்டிருக்கான், ராகவா. இன்னைக்கு எப்படியும் சம்பளம் வந்திடுமே…”
இல்லை சார், சம்பளம் டிலே ஆகுமுன்னு பேசிக்கிட்டாங்க…”
அப்படியா அப்படின்னாவேற ஏதாவது  ஒரு வழியில்  பணம் வரும். ஜோசியத்துல எனக்கு நம்பிக்கை இருக்கு.”
காவல்துறையில் ஒரு காவலராக 25 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய ரங்கராஜ் உறுதியாகச் சொல்கிறார்.
ஐயா கூப்பிடறாரு…”
மற்றொரு காவலரின் குறிப்பின்படி உயர் அதிகாரியின் அறைக்குள் அவசரமாய் சென்ற ரங்கராஜ், சிறிதுநேரம் கழித்து திரும்புகிறார்.
என்ன சொல்றாரு அய்யாத்துரை?கிண்டலாய் கேட்டார் ராகவன்.
ராம் நகர்ல எலும்பன்னு ஒரு திருடன் நடமாடிக்கிட்டு இருக்கறதா நியூஸ் வந்திருக்காம். என்னமோ அவன் வித்தியாசமா பகல்ல மட்டுந்தான் திருடுவானாம். என்னை போய் பார்க்க சொல்றாரு…”
என்ன பேரு சொன்னீங்க? எலும்பனா…?!”
ஆமாம். எலும்பன்பேரே வித்தியாசமா இருக்கு…”
உங்களைத்தனியாவா போய் பார்க்கச்சொன்னாரு…?”
ஆமாம். ஏன் கேட்கிற…?”
சார், எலும்பனைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். என் மாமனார் அவனைப்பத்தி கதை, கதையா சொல்லியிருக்கார். அவர் ஊருக்கு பக்கத்து கிராமத்துலதான் எலும்பன் பிறந்தானாம்.”
சரி. உனக்கு தெரிஞ்சதைச் சொல்லு…” ரிலாக்சாய் அமர்ந்து கொண்டு ரங்கராஜ் கேட்க ஆரம்பிக்கிறார்.
எலும்பனைப் பார்க்கிறதும் எமனைப்பார்க்கிறதும் ஒண்ணுன்னு ஊருக்குள்ளே சொல்வாங்களாம். சொல்லப்போனா… உங்க வயசுதான் அவனுக்கும் இருக்குமின்னு நினைக்கிறேன். அவனுக்கு உறவுன்னு யாருமில்லையாம். அவன் பகல்லதான் திருடுவானாம். ஆள் இல்லாத வீடு, தனியா ஆள் இருக்கிற தனி வீடுன்னு நோட்டம் பார்த்து திருடுவானாம்.
ஆனால் திருடப்போற வீட்டில், இரண்டு பேரைப்பார்த்தாக்கூட சத்தம் காட்டாமல், பூனை போல், வந்த வழியாவே போயிடுவானாம்.
அவன் ஒல்லியா இருக்கிறதால எதையும் உடைச்சு உள்ளே போகவேண்டிய அவசியமே இருக்காதாம். சந்து, பொந்து, இண்டு இடுக்குன்னு உள்ளே புகுந்திருவானாம்.
அவன் திருடன் மட்டும் இல்லை. கிறுக்கன். கொலைகாரன். திருடறப்ப அவன் மாட்டிக்கிட்டா, மாட்டிக்கிடுறது அவன் இல்லை. அந்த வீட்டுல இருக்கிறவன்தான். ஏன்னா அவன் திருடற பணத்தில் சைலன்சரோடு இருக்கிற, லேட்டஸ்ட் துப்பாக்கியா வாங்கி வச்சிருப்பானாம். துப்பாக்கியோட அவனை பார்க்கிறவங்க திகிலில் அப்படியே உறைஞ்சு போயிடுவாங்க.
தன்னை பார்த்தவங்களை ஒத்தைக்கு ஒத்தை வர்றியான்னு கூப்பிடுவானாம். வயசான கிழவி, சின்னப்பையன், திடகாத்திரமா இருக்கிற இளைஞன்னு யாரா இருந்தாலும், எல்லோருமே அவனுக்கு ஒண்ணுதான். அவங்களை அசிங்க, அசிங்கமாப்பேசி சீண்டி விட்டுக்கிட்டே இருப்பானாம். அப்படியும் அவங்க கோபத்துல அவனை அடிக்க வராம ஒதுங்கினால், கடைசியாய், ஒரு ஒத்த ரூபா காசை எடுத்து, சுண்டி விடுவானாம். பூ விழுந்தா அவங்களை சுட்டு கொன்னுடுவானாம். தலை விழுந்தா அந்த ஒத்த ரூபா காசை அவங்க கிட்டே கொடுத்துட்டு போயிடுவானாம்.
அதுக்குத்தான் கேட்டேன். தனியாவா போகச் சொன்னாருன்னு
அய்யாத்துரைக்கு எலும்பனைப் பத்தி ஒண்ணும் தெரியாதுன்னு நினைக்கிறேன்.
வேணுமின்னா அய்யாத்துரைகிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு நானும் உங்ககூட வரவா…?”
ரங்கராஜ் பெருமூச்சுவிட்டார்.
ஐய்யய்யோ வேண்டாம். நானே எதார்த்தமா, கூட யாரையாவது கூப்பிட்டுக்கவான்னு கேட்டதுக்கு, துரைசாமி காச், மூச்சுன்னு கத்திட்டாரு…”
என்ன சொன்னாரு…?”
ராம் நகர்ல மொத்தமே 20 பங்களாதான் இருக்காம். அதுல கடைசி வீடு கவுன்சிலர் வீடாம். அவர் குடும்பத்தோடு நார்த் இண்டியா டூர் போயி ஒரு வாரம் ஆச்சாம். வர நாலஞ்சு நாளாகுமாம். அவர், வீட்டுச்சாவியை இவர்கிட்டே நண்பர்ங்கிற முறையில் கொடுத்துட்டு போயிருக்காராம்.
நான் அந்த ஏரியாவுல ஏழெட்டு மணி நேரம் ரோந்து போயிட்டு, அவசியமின்னா, கவுன்சிலர் வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு, மெதுவா வந்தாப்போதுமின்னு சாவியை கையில கொடுத்திட்டார். வயசானவன்னு, என் மேல எப்பவுமே அவருக்கு ஒரு கரிசனமிருக்குகவுன்சிலர் வீட்டை மட்டும் ஸ்பெஷலா கவனிக்க உத்தரவு.
இந்த வேலையை பார்க்க இரண்டு பேர் தேவையான்னு கேட்கிறாருஇந்த வேலையில் உங்களுக்கு ஏதும் கஷ்டம் இருந்தால், இதே வேலையை ரொட்டேஷன்ல கொடுத்திடுங்கஆனால் சாவியை வேற யார்கிட்டேயும் கொடுத்துடாதீங்கன்னு சொல்லிட்டார்.”
அப்புறமென்ன? இளவட்டம், நான் போறேன்.”
இல்லையில்லைநானே போறேன். துரைசாமி பேச்சுக்கு ஒரு மரியாதை கொடுக்கணுமில்லைஅதுக்காகவாவது நான் கட்டாயம் போகணும்.”
அவர் மேல, நீங்க வைச்சிருக்கிற மரியாதை, ஊரறிந்த ரகசியமாச்சேஅது சரி. சமாளிச்சிருவீங்களா?”
ராகவா, நீ சொன்ன தகவலுக்கு ரொம்ப தாங்க்ஸ். நீ சொன்னபடி கவனமா இருந்துக்கிறேன். சரிதானே…?”

இரவு 7 மணி.
என்ன ராகவாதுரைசாமி இருக்காரா…?”
ஸ்டேஷன் திரும்பிய ரங்கராஜ் கேட்டார்.
இருக்கார். ஏதும் பேசணுமா…?”
அதெல்லாம் இல்லை. சம்பளம் போட்டாச்சுன்னா, ஒரு கையெழுத்து வாங்க வேண்டியதிருக்கும்அதான். ஆமாம், சம்பளம் போட்டாச்சுல்லே…?”
அதுதான் நான் காலையிலேயே சொன்னேனேலேட்டாகுமின்னு…”
ச்சே! எப்படியும் சம்பளம் போட்டிருப்பான்னு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தேன்.”
போங்க சார். நீங்களும்…, உங்க ஜோசியமும்…! அது சரி போன வேலையில், ஒண்ணும் பிரச்சினை இல்லையே?”
அதெல்லாம் ஒண்ணும் இல்லை.”
நாளைக்கும் நீங்களே போகிறீர்களா…?”
இல்லையில்லை. ஒரே வேலையை திரும்பத்திரும்ப செஞ்சா போரடிக்கும். ரொட்டேஷன்ல கொடுத்து விடுவோம். அதுதான் நல்லது.”
- எனறவர் அனிச்சையாய், தன் சட்டைப்பையில் பத்திரமாக வைத்திருந்த ஒத்த ரூபாய் காசை தொட்டுப்பார்த்தார்.
குறிப்பு : No country for old men - ஆங்கிலத் திரைப்படம் தந்த பாதிப்பால் உருவான சிறுகதை இது.

1 comment:

Blogger Widgets