ads

Wednesday, September 2, 2020

School Memories ( Childhood Memories : 5 )

பள்ளிக்கூட நினைவலைகள் :

எட்டாம் வகுப்பு வரை ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க முடிந்த என்னால், அதன்பிறகு, ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க முடியாமல் போனது.
அதிக தரம் வாய்ந்த பள்ளி என்பதாலும், வீட்டிற்கு வெகு அருகில் இருந்த பள்ளி என்பதாலும், நான் படித்த பள்ளியிலிருந்து வேறு ஒரு பள்ளிக்கு (தமிழ் மீடியம்) மாறினேன். அங்கு எவ்வளவுதான் முட்டி மோதினாலும் என்னால் இரண்டாவது ரேங்க்தான் வாங்க முடிந்தது.
அங்கு இரண்டு வருட படிப்பு முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பில் 442 / 500 (88%) மதிப்பெண்கள்    பெற்றிருந்தாலும்,   அறிவியல்   பாடத்தில்   பள்ளியளவில்    முதல்   மதிப்பெண் ( 98 / 100 ) பெற்றிருந்தாலும், “ பத்தாம் வகுப்பு கல்வியாண்டில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளி வந்த மாணவன் ” என்று சான்றிதழ் வாங்கியிருந்தாலும், பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை.
அதிர்ச்சி… குழப்பம்… நானும், என்னுடைய அம்மாவும் தலைமையாசிரியரைப் பார்த்து, இது குறித்து விசாரித்தோம். அவர் என்னை அதே பள்ளியில் ஆங்கில மீடியம் செக்க்ஷனில் சேர்த்திருப்பதாகச் சொன்னார். அதிர்ந்து மறுத்த என்னை, “ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படித்த உன்னால் நிச்சயம் சமாளிக்க முடியும். மேலும் எப்படியும் கல்லூரியில் பெரும்பாலும் ஆங்கில மீடியம்தான் இருக்கும். அப்போது சமாளித்துதான் ஆக வேண்டியிருக்கும். அதை, இப்போதே செய்… “ என்று கூறி, வலுக்கட்டாயமாக ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டார்.
அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கவலையில் ஆழ்ந்தேன்.
பனிரெண்டாம்   வகுப்பு  பொதுத்தேர்வில்பள்ளியளவில்ஆங்கிலப்பாடத்தில்  முதல்  மதிப்பெண் ( 177 / 200 , 89% ) பெறப்போகும் மாணவனே நான்தான்… என்பது தெரியாமல் அன்றைய சூழலில் மிகவும் குழம்பிப்போனேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போது வீட்டிலிலேயே முடங்கிப்போய், ' பக்தி ’, ' முக்தி ' என்று ஆன்மீகப்புத்தகங்களை கரைத்து குடித்துக் கொண்டிருந்த என் அண்ணனின் ஆலோசனையின்படி, பதினோராம் வகுப்பு ஆங்கில மீடியப் புத்தகங்களோடு, தமிழ் மீடிய புத்தகங்களையும் சேர்த்து வாங்கி, ஒப்பிட்டு, ஒப்பிட்டு புரிந்து படித்து பதினோராம் வகுப்பை தாண்டினேன். அதன்பிறகு எனக்கு, பனிரெண்டாம் வகுப்பில் தமிழ் மீடிய புத்தகங்கள் தேவைப்படவில்லை.
அது சரி, ஆங்கிலப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற ரகசியத்தை சொல்கிறேன்.
ஆங்கிலப்பாடத்திற்கு நோட்ஸ் வாங்கச் சென்றேன். கடையில் 60 பக்க நோட்ஸ் 40/- ரூபாய் என்றார்கள். 100 பக்க நோட்ஸ் 50/- ரூபாய் என்றார்கள் (ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்…). எது இலாபம் என யோசித்தேன். 100 பக்க நோட்ஸை வாங்கினேன் (பிசினஸ் மைன்ட் மொமண்ட்).பள்ளியில் மற்ற மாணவர்கள் அனைவரும் 40/- ரூபாய் நோட்ஸை பின்பற்றி படிக்க, ‘என் வழி தனி வழி’ என்று நான் தைரியமாக அந்தத் தரமான 50/- ரூபாய் நோட்ஸை பின்பற்றி படித்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். அவ்வளவுதான்...

Sunday, August 23, 2020

Childhood Memories 4 :

பால்ய கால நினைவுகள் : 4 : நான் ஆறாம் வகுப்பில் பெயிலான கதை :

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒல்லியான தேகம் கொண்ட என் அண்ணன் எப்பொழுதும் மிகக் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவான். எப்போதும் சோர்ந்தே இருப்பான். அவன் பள்ளிப்பாடங்களை மிக, மிக மெதுவாகத் தான் எழுதுவான். அதனால் ஏற்பட்ட சிரமங்களால், அவனுக்கு பள்ளி செல்ல விருப்பமில்லாமலே போய் விட்டது.

பள்ளிக்கு எங்கள் இருவரையும் எங்கள் அப்பா சைக்கிளில் கொண்டு சென்று விடுவது வழக்கம். சீருடை அணிந்து, சாப்பிட்டு முடித்து, பள்ளிக்குக் கிளம்பும் சரியான நேரத்தில், வீட்டிலிருந்து இருந்து தப்பித்து ஓடி, பள்ளிக்கு செல்லாமல் டிமிக்கி அடிப்பது அவனது வழக்கம்.

அவன் அடிக்கடி பள்ளிக்கு டிமிக்கி அடிப்பதைப் பார்த்து, பார்த்து, “ நான் மட்டும் என்ன இளிச்சவாயனா…? ” என்று யோசித்து பார்த்ததின் விளைவு, எனக்கும் பள்ளிக்கு டிமிக்கி அடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. சரியாக பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில், அவன் கிழக்கு பக்கம் தப்பித்து ஓட… நான் மேற்கு பக்கம் தப்பித்து ஓட, எங்கள் அப்பா யாரை பின் தொடர்ந்து ஓட…? எனக் குழம்பி நிற்பார்.

இப்படியாக அந்த வருட பள்ளிப்படிப்பில் இருவரும் பெயிலாகிவிட… எங்கள் அப்பா, இனி இருவரையும் ஆங்கில மீடியத்தில் படிக்க வைப்பது வீண் செலவு என முடிவு செய்து தமிழ் மீடியத்தில் வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டார்.

தமிழ் மீடியத்தில் சேர்த்துவிடப்பட்ட நான், அங்கு உள்ள மாணவர்கள் ஆங்கிலப்பாடத்தில் பாஸாகவும், மதிப்பெண் எடுக்கவும் மிகவும் சிரமப்படுவதைப் பார்த்தேன். நானோ அசால்ட்டாக எழுபதுக்கு மேல் வாங்கினேன். அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது… அந்தக் கூட்டத்தில் நான்தான் ராஜா என்று… முதல் பருவத்தேர்வில் ஐம்பதாவது ரேங்க் வாங்கிய நான், அடுத்த பருவத்தேர்வில் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினேன். உண்மை. அதன் பிறகு போட்டிக்கு ஆள் இல்லாமல் அன்னபோஸ்ட்டாக (அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை) எப்பொழும் நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க். இப்படியாக நான் படிப்போடு ஒன்றிவிட… வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்ட என் அண்ணனோ பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டான். அவனையும் குறை சொல்லிவிட முடியாது. வீக்கான உடல்நிலை அவனுக்குள் நிறைய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது.

Childhood Memories 3 :

பால்யகால நினைவுகள் : 3 

கிராமத்தில், மாலைவேளையில் பொழுது போகாமல் நானும், என் அண்ணனும் சுற்றித்திரிந்தோம். அப்போதெல்லாம் எல்லோருடைய வீடுகளிலும் டி.வி இருக்காது. அது ஒரு கிராமம் என்பதால் ஒரு தெருவில் நான்கைந்து வீடுகளில் டி.வி இருந்தால் அதிகம்.

தெருவில் நடந்த சென்று கொண்டிருந்த நாங்கள் ஒரு வீட்டில் பத்து, பதினைந்து பேர் கூட்டமாக டி.வியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, நாங்களும் அந்தக்கூட்டத்தில் இணைந்து டி.வி பார்த்தோம். நாங்கள் டி.விக்கு வெகு அருகில் உட்கார்ந்து டி.வி பார்க்க நேர்ந்தது.

அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போது அதில் ஒரு கதாபாத்திரம் மட்டும் திடீரென்று இயல்புக்கு மீறி, கட்டைக் குரலில் பேசுவதுபோல் தோன்றவே… நான் குழப்பத்துடன் என் அண்ணனைப் பார்த்தேன். அவனும் அந்த விசயத்தை கவனித்து, என்னைக் குழப்பத்துடன் பார்த்தான். பிறகு நாங்கள் இருவரும் மற்றவர்களை திரும்பிப் பார்க்க, அவர்களோ எந்த சலனமும் இல்லாமல் டி.வி பார்த்துக் கொண்டிருக்க, எங்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டு மீண்டும் டி.வி பார்க்க, அதே போலவே, அதே கதாபாத்திரம் கட்டைக் குரலில் பேச… நாங்கள் மட்டும் ரகசியமாக சிரித்தோம். என்ன மாயமோ தெரியவில்லை... மற்ற அனைவரும் எந்த சலனமும் இல்லாமல் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். எங்களால் சிரிப்பை அடக்கமுடியாமல் போனநிலையில், நாங்கள் சிரிப்பதை மற்றவர்கள் கவனித்து விட… எங்கே அவர்கள் எங்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டுவிடுவார்களோ என்று பயந்து, நாங்களாகவே வெளியே வந்து விட்டோம்.

ஏதோ ஒரு அமானுஷ்யம் அன்று எங்களை திட்டமிட்டு வெளியே தள்ளிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

மறுநாள் காலையில் நாளிதழ் செய்தி : “வீட்டின் மேற்கூரை இடிந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் படுகாயம்.”

ஹி… ஹி… மேற்கண்ட கடைசி வரி மட்டும் கற்பனை. சுவாரஸ்யமான ஒரு பொய்.

“மோஸ்ட் வெல்கம் அம்மா…”

சும்மா... எனக்கு மிகவும் பிடித்த டி.வி விளம்பரத்தின் எஃபெக்ட்டை இந்த உண்மைச்சம்பவத்தில் இணைத்துப்பார்த்தேன்.

Childhood Memories 2 :

பால்ய கால நினைவுகள் 2 :

அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். சரியாக நினைவில்லை. அதிகபட்சம் ஐந்திருக்கும். எப்போதுமே நாங்கள் விடுமுறைக்காலத்தை கிராமத்திலிருக்கும் எங்கள் ஆச்சி (பாட்டி) வீட்டில்தான் செலவிடுவோம்.

அப்போதும் அப்படித்தான். அது ஒரு சிறிய கிராமம். அதன் அருகில் 5 கி.மீ தூரத்தில் ஒரு நகரம். மாட்னி ஷோ திரைப்படம் பார்க்க என் அண்ணனையும், என்னையும் அந்நகரத்திற்குக் கூட்டிச்சென்ற எங்கள் மாமா, திரைப்படம் முடிந்தபிறகு, அந்நகரத்திலுள்ள ஒரு உறவுக்காரர் வீட்டில் எங்களை விட்டுவிட்டு, வேறு ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டார்.

அந்த உறவுக்கார வீட்டின் குடும்பத்தலைவர் கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவர். நாங்கள் சென்ற நேரம் அவர் இல்லை என்பதால் நாங்கள் அங்கிருக்க ஒத்துக்கொண்டோம். வெகுநேரம் சென்றது. வெளியே சென்ற மாமா வந்தபாடில்லை. இரவு 9 மணிக்கு மேல் ஆயிற்று. அவ்வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்தலைவர் வேலையை முடித்து வீடு திரும்ப இருப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அந்த வயதில் எனக்கு, குடிப்பழக்கம் உள்ளவர்களை பார்த்தால் மிகுந்த பயம். நான் பயந்ததுபோல் அல்லாமல், என் அண்ணன் எப்போதும்போல் அமைதியாக, இயல்பாக இருந்தான்.

என் அண்ணனைப் பற்றி சொல்வதென்றால்… அவன் என்னைவிட ஒரு வயது மூத்தவன். இயல்பாகவே மெலிந்த தேகம் கொண்டவன். மிகச்சிறிய வயதில் எங்கள் அம்மா, தம்பியாகிய என்னை கீழே நடக்கவிட்டுவிட்டு, அவனை இடுப்பில் தூக்கிச் சுமந்து நடப்பார்களாம்… அந்த அளவிற்கு உடலாலும், மனதாலும் வீக்கானவன்.

நான் என் அண்ணனிடம் “நாம் உடனடியாக இங்கிருந்து தப்பித்து ஓடிவிடவேண்டும். இங்கிருந்தால் அந்த குடிகார உறவினர் நம்மை என்ன செய்வார் என்பதே தெரியாது… நாம் இப்போதே ஆச்சி வீட்டிற்கு சென்று விடுவோம்” என்று கூற, எனது பயம் மற்றும் பதட்டம் என் அண்ணனையும் தொற்றிக் கொண்டது.

“பஸ்ஸில் செல்ல காசு இல்லையே… நாம் எப்படி செல்ல முடியும்?!” என்று அவன் புலம்ப, நான் பணம் வைத்திருக்கும் விசயத்தைச் சொல்ல, இருவரும் நெடுநேரம் பஸ்ஸிற்கு காத்திருந்து, வேறு வழியின்றி, கூட்டமான பஸ் ஒன்றில் ஏறி, நின்றுகொண்டே பயணித்து, களைத்து, வெகுநேரம் கழித்து கிராமம் சென்றடைந்தோம்.

இதற்கிடையே எங்கள் ஆச்சி வீட்டிற்கு நாங்கள் காணாமல் போன விசயம் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட, இரவு நேரத்தில், கிராமம், நகரம் என மாறி, மாறி, எங்கள் உறவினர்கள் பதட்டத்துடன் ஆளுக்கொரு பக்கமாக எங்களைத் தேட ஆரம்பிக்க… பெரிய குழப்பமாகிப் போனது.

ஒரு வழியாக வெகுநேரம் கழித்து, ஆடி, அசைந்து, நாங்களாக வீடு வந்த சேர... அப்புறம் என்ன... பொறுப்புடன் எங்களை தேடியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வெறுப்புடன் தர்மஅடி கொடுத்தனர்.


Childhood Memories 1 :

பால்ய கால நினைவுகள் 1 :

நான் 1-ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம் இது…

ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, மற்றொரு ஆசிரியை வந்து என் பெயரை குறிப்பிட்டு வகுப்பை விட்டு வெளியே வரச்சொன்னார்கள். குழப்பத்துடன் அவர் பின்னால் சென்ற எனக்கு ஒரு வருத்தமான செய்தி… அதனை தொடர்ந்து ஒரு மகிழ்ச்சியான சம்பவம்.

வருத்தமான செய்தி என்னவென்றால் அதே பள்ளியில் படிக்கும் என் அக்கா (நான்காம் வகுப்பு) பசி மயக்கத்தில் மயங்கி விழுந்திருக்கிறார் என்பது…

விசயம் இதுதான்… காலையில் பள்ளிக்குக் கிளம்ப நேரமாகி விட்டபடியால் இருவரும் காலை உணவை தவிர்த்து பள்ளிக்கு சென்றிருந்தோம். (அனைத்து மதத்தினரும் படிக்கும் பெருமை வாய்ந்த அப்பள்ளியின் நிர்வாகத்தினர் முஸ்லிம்கள்)

இனி மகிழ்ச்சியான சம்பவம்...

ஆசிரியை எங்கள் இருவரையும் அழைத்து ரொட்டி சாப்பிடுவீர்களா…? என்று பரிவுடன் கேட்க, இருவரும் ஏதோ பன்ரொட்டியை சொல்கிறார் போலும் என்று வேகமாக தலையை அசைக்க… ஹோட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட... இருவரும், இதுதான் ரொட்டியா…? ரொட்டிக்கு குழம்பா…? என்று குழப்பத்துடன் சாப்பிட்டு முடித்தோம். (நல்ல உள்ளம் கொண்ட அந்த ஆசிரியை பெருமக்களுக்கு இவ்வேளையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்)

வீட்டிற்கு வந்து எங்கள் பெற்றோரிடம் விசயத்தை சொன்ன பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது… நாங்கள் சாப்பிட்டது புரோட்டா மற்றும் சால்னா என்பது… முட்டைகூட சாப்பிடும் வழக்கம் இல்லாத, சுத்த சைவ உணவு பழக்கம் கொண்ட நாங்கள், அசைவ உணவை (!) சாப்பிட்டுவிட்டோம். அன்று முதல் புரோட்டா மற்றும் சால்னா எனக்கு (மட்டும்) பிடித்த உணவாகிப் போனது. (சால்னாவின் சுவை அதில் கரைத்து ஊற்றப்படும் தேங்காயில்தான் உள்ளது என்பது எனக்கு பலவருடங்களாகத் தெரியாது. அது Non-Veg ருசி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னாளில் Non-Veg ஐட்டங்கள் பலவற்றை ஒருமுறை ஆசைக்காக ருசி பார்த்தேன் என்பது தனிக்கதை.)
Blogger Widgets