ads

Wednesday, September 2, 2020

School Memories ( Childhood Memories : 5 )

பள்ளிக்கூட நினைவலைகள் :

எட்டாம் வகுப்பு வரை ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க முடிந்த என்னால், அதன்பிறகு, ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க முடியாமல் போனது.
அதிக தரம் வாய்ந்த பள்ளி என்பதாலும், வீட்டிற்கு வெகு அருகில் இருந்த பள்ளி என்பதாலும், நான் படித்த பள்ளியிலிருந்து வேறு ஒரு பள்ளிக்கு (தமிழ் மீடியம்) மாறினேன். அங்கு எவ்வளவுதான் முட்டி மோதினாலும் என்னால் இரண்டாவது ரேங்க்தான் வாங்க முடிந்தது.
அங்கு இரண்டு வருட படிப்பு முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பில் 442 / 500 (88%) மதிப்பெண்கள்    பெற்றிருந்தாலும்,   அறிவியல்   பாடத்தில்   பள்ளியளவில்    முதல்   மதிப்பெண் ( 98 / 100 ) பெற்றிருந்தாலும், “ பத்தாம் வகுப்பு கல்வியாண்டில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளி வந்த மாணவன் ” என்று சான்றிதழ் வாங்கியிருந்தாலும், பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை.
அதிர்ச்சி… குழப்பம்… நானும், என்னுடைய அம்மாவும் தலைமையாசிரியரைப் பார்த்து, இது குறித்து விசாரித்தோம். அவர் என்னை அதே பள்ளியில் ஆங்கில மீடியம் செக்க்ஷனில் சேர்த்திருப்பதாகச் சொன்னார். அதிர்ந்து மறுத்த என்னை, “ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படித்த உன்னால் நிச்சயம் சமாளிக்க முடியும். மேலும் எப்படியும் கல்லூரியில் பெரும்பாலும் ஆங்கில மீடியம்தான் இருக்கும். அப்போது சமாளித்துதான் ஆக வேண்டியிருக்கும். அதை, இப்போதே செய்… “ என்று கூறி, வலுக்கட்டாயமாக ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டார்.
அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கவலையில் ஆழ்ந்தேன்.
பனிரெண்டாம்   வகுப்பு  பொதுத்தேர்வில்பள்ளியளவில்ஆங்கிலப்பாடத்தில்  முதல்  மதிப்பெண் ( 177 / 200 , 89% ) பெறப்போகும் மாணவனே நான்தான்… என்பது தெரியாமல் அன்றைய சூழலில் மிகவும் குழம்பிப்போனேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போது வீட்டிலிலேயே முடங்கிப்போய், ' பக்தி ’, ' முக்தி ' என்று ஆன்மீகப்புத்தகங்களை கரைத்து குடித்துக் கொண்டிருந்த என் அண்ணனின் ஆலோசனையின்படி, பதினோராம் வகுப்பு ஆங்கில மீடியப் புத்தகங்களோடு, தமிழ் மீடிய புத்தகங்களையும் சேர்த்து வாங்கி, ஒப்பிட்டு, ஒப்பிட்டு புரிந்து படித்து பதினோராம் வகுப்பை தாண்டினேன். அதன்பிறகு எனக்கு, பனிரெண்டாம் வகுப்பில் தமிழ் மீடிய புத்தகங்கள் தேவைப்படவில்லை.
அது சரி, ஆங்கிலப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற ரகசியத்தை சொல்கிறேன்.
ஆங்கிலப்பாடத்திற்கு நோட்ஸ் வாங்கச் சென்றேன். கடையில் 60 பக்க நோட்ஸ் 40/- ரூபாய் என்றார்கள். 100 பக்க நோட்ஸ் 50/- ரூபாய் என்றார்கள் (ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்…). எது இலாபம் என யோசித்தேன். 100 பக்க நோட்ஸை வாங்கினேன் (பிசினஸ் மைன்ட் மொமண்ட்).பள்ளியில் மற்ற மாணவர்கள் அனைவரும் 40/- ரூபாய் நோட்ஸை பின்பற்றி படிக்க, ‘என் வழி தனி வழி’ என்று நான் தைரியமாக அந்தத் தரமான 50/- ரூபாய் நோட்ஸை பின்பற்றி படித்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். அவ்வளவுதான்...

No comments:

Post a Comment

Blogger Widgets