ads

Sunday, August 23, 2020

Childhood Memories 4 :

பால்ய கால நினைவுகள் : 4 : நான் ஆறாம் வகுப்பில் பெயிலான கதை :

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒல்லியான தேகம் கொண்ட என் அண்ணன் எப்பொழுதும் மிகக் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவான். எப்போதும் சோர்ந்தே இருப்பான். அவன் பள்ளிப்பாடங்களை மிக, மிக மெதுவாகத் தான் எழுதுவான். அதனால் ஏற்பட்ட சிரமங்களால், அவனுக்கு பள்ளி செல்ல விருப்பமில்லாமலே போய் விட்டது.

பள்ளிக்கு எங்கள் இருவரையும் எங்கள் அப்பா சைக்கிளில் கொண்டு சென்று விடுவது வழக்கம். சீருடை அணிந்து, சாப்பிட்டு முடித்து, பள்ளிக்குக் கிளம்பும் சரியான நேரத்தில், வீட்டிலிருந்து இருந்து தப்பித்து ஓடி, பள்ளிக்கு செல்லாமல் டிமிக்கி அடிப்பது அவனது வழக்கம்.

அவன் அடிக்கடி பள்ளிக்கு டிமிக்கி அடிப்பதைப் பார்த்து, பார்த்து, “ நான் மட்டும் என்ன இளிச்சவாயனா…? ” என்று யோசித்து பார்த்ததின் விளைவு, எனக்கும் பள்ளிக்கு டிமிக்கி அடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. சரியாக பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில், அவன் கிழக்கு பக்கம் தப்பித்து ஓட… நான் மேற்கு பக்கம் தப்பித்து ஓட, எங்கள் அப்பா யாரை பின் தொடர்ந்து ஓட…? எனக் குழம்பி நிற்பார்.

இப்படியாக அந்த வருட பள்ளிப்படிப்பில் இருவரும் பெயிலாகிவிட… எங்கள் அப்பா, இனி இருவரையும் ஆங்கில மீடியத்தில் படிக்க வைப்பது வீண் செலவு என முடிவு செய்து தமிழ் மீடியத்தில் வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்துவிட்டார்.

தமிழ் மீடியத்தில் சேர்த்துவிடப்பட்ட நான், அங்கு உள்ள மாணவர்கள் ஆங்கிலப்பாடத்தில் பாஸாகவும், மதிப்பெண் எடுக்கவும் மிகவும் சிரமப்படுவதைப் பார்த்தேன். நானோ அசால்ட்டாக எழுபதுக்கு மேல் வாங்கினேன். அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது… அந்தக் கூட்டத்தில் நான்தான் ராஜா என்று… முதல் பருவத்தேர்வில் ஐம்பதாவது ரேங்க் வாங்கிய நான், அடுத்த பருவத்தேர்வில் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினேன். உண்மை. அதன் பிறகு போட்டிக்கு ஆள் இல்லாமல் அன்னபோஸ்ட்டாக (அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை) எப்பொழும் நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க். இப்படியாக நான் படிப்போடு ஒன்றிவிட… வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்ட என் அண்ணனோ பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டான். அவனையும் குறை சொல்லிவிட முடியாது. வீக்கான உடல்நிலை அவனுக்குள் நிறைய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது.

No comments:

Post a Comment

Blogger Widgets