பால்ய கால நினைவுகள் 1 :
நான் 1-ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம் இது…
ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, மற்றொரு ஆசிரியை வந்து என் பெயரை குறிப்பிட்டு வகுப்பை விட்டு வெளியே வரச்சொன்னார்கள். குழப்பத்துடன் அவர் பின்னால் சென்ற எனக்கு ஒரு வருத்தமான செய்தி… அதனை தொடர்ந்து ஒரு மகிழ்ச்சியான சம்பவம்.
வருத்தமான செய்தி என்னவென்றால் அதே பள்ளியில் படிக்கும் என் அக்கா (நான்காம் வகுப்பு) பசி மயக்கத்தில் மயங்கி விழுந்திருக்கிறார் என்பது…
விசயம் இதுதான்… காலையில் பள்ளிக்குக் கிளம்ப நேரமாகி விட்டபடியால் இருவரும் காலை உணவை தவிர்த்து பள்ளிக்கு சென்றிருந்தோம். (அனைத்து மதத்தினரும் படிக்கும் பெருமை வாய்ந்த அப்பள்ளியின் நிர்வாகத்தினர் முஸ்லிம்கள்)
இனி மகிழ்ச்சியான சம்பவம்...
ஆசிரியை எங்கள் இருவரையும் அழைத்து ரொட்டி சாப்பிடுவீர்களா…? என்று பரிவுடன் கேட்க, இருவரும் ஏதோ பன்ரொட்டியை சொல்கிறார் போலும் என்று வேகமாக தலையை அசைக்க… ஹோட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட... இருவரும், இதுதான் ரொட்டியா…? ரொட்டிக்கு குழம்பா…? என்று குழப்பத்துடன் சாப்பிட்டு முடித்தோம். (நல்ல உள்ளம் கொண்ட அந்த ஆசிரியை பெருமக்களுக்கு இவ்வேளையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்)
வீட்டிற்கு வந்து எங்கள் பெற்றோரிடம் விசயத்தை சொன்ன பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது… நாங்கள் சாப்பிட்டது புரோட்டா மற்றும் சால்னா என்பது… முட்டைகூட சாப்பிடும் வழக்கம் இல்லாத, சுத்த சைவ உணவு பழக்கம் கொண்ட நாங்கள், அசைவ உணவை (!) சாப்பிட்டுவிட்டோம். அன்று முதல் புரோட்டா மற்றும் சால்னா எனக்கு (மட்டும்) பிடித்த உணவாகிப் போனது. (சால்னாவின் சுவை அதில் கரைத்து ஊற்றப்படும் தேங்காயில்தான் உள்ளது என்பது எனக்கு பலவருடங்களாகத் தெரியாது. அது Non-Veg ருசி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னாளில் Non-Veg ஐட்டங்கள் பலவற்றை ஒருமுறை ஆசைக்காக ருசி பார்த்தேன் என்பது தனிக்கதை.)
No comments:
Post a Comment