ads

Sunday, August 23, 2020

Childhood Memories 2 :

பால்ய கால நினைவுகள் 2 :

அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். சரியாக நினைவில்லை. அதிகபட்சம் ஐந்திருக்கும். எப்போதுமே நாங்கள் விடுமுறைக்காலத்தை கிராமத்திலிருக்கும் எங்கள் ஆச்சி (பாட்டி) வீட்டில்தான் செலவிடுவோம்.

அப்போதும் அப்படித்தான். அது ஒரு சிறிய கிராமம். அதன் அருகில் 5 கி.மீ தூரத்தில் ஒரு நகரம். மாட்னி ஷோ திரைப்படம் பார்க்க என் அண்ணனையும், என்னையும் அந்நகரத்திற்குக் கூட்டிச்சென்ற எங்கள் மாமா, திரைப்படம் முடிந்தபிறகு, அந்நகரத்திலுள்ள ஒரு உறவுக்காரர் வீட்டில் எங்களை விட்டுவிட்டு, வேறு ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டார்.

அந்த உறவுக்கார வீட்டின் குடும்பத்தலைவர் கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவர். நாங்கள் சென்ற நேரம் அவர் இல்லை என்பதால் நாங்கள் அங்கிருக்க ஒத்துக்கொண்டோம். வெகுநேரம் சென்றது. வெளியே சென்ற மாமா வந்தபாடில்லை. இரவு 9 மணிக்கு மேல் ஆயிற்று. அவ்வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்தலைவர் வேலையை முடித்து வீடு திரும்ப இருப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அந்த வயதில் எனக்கு, குடிப்பழக்கம் உள்ளவர்களை பார்த்தால் மிகுந்த பயம். நான் பயந்ததுபோல் அல்லாமல், என் அண்ணன் எப்போதும்போல் அமைதியாக, இயல்பாக இருந்தான்.

என் அண்ணனைப் பற்றி சொல்வதென்றால்… அவன் என்னைவிட ஒரு வயது மூத்தவன். இயல்பாகவே மெலிந்த தேகம் கொண்டவன். மிகச்சிறிய வயதில் எங்கள் அம்மா, தம்பியாகிய என்னை கீழே நடக்கவிட்டுவிட்டு, அவனை இடுப்பில் தூக்கிச் சுமந்து நடப்பார்களாம்… அந்த அளவிற்கு உடலாலும், மனதாலும் வீக்கானவன்.

நான் என் அண்ணனிடம் “நாம் உடனடியாக இங்கிருந்து தப்பித்து ஓடிவிடவேண்டும். இங்கிருந்தால் அந்த குடிகார உறவினர் நம்மை என்ன செய்வார் என்பதே தெரியாது… நாம் இப்போதே ஆச்சி வீட்டிற்கு சென்று விடுவோம்” என்று கூற, எனது பயம் மற்றும் பதட்டம் என் அண்ணனையும் தொற்றிக் கொண்டது.

“பஸ்ஸில் செல்ல காசு இல்லையே… நாம் எப்படி செல்ல முடியும்?!” என்று அவன் புலம்ப, நான் பணம் வைத்திருக்கும் விசயத்தைச் சொல்ல, இருவரும் நெடுநேரம் பஸ்ஸிற்கு காத்திருந்து, வேறு வழியின்றி, கூட்டமான பஸ் ஒன்றில் ஏறி, நின்றுகொண்டே பயணித்து, களைத்து, வெகுநேரம் கழித்து கிராமம் சென்றடைந்தோம்.

இதற்கிடையே எங்கள் ஆச்சி வீட்டிற்கு நாங்கள் காணாமல் போன விசயம் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட, இரவு நேரத்தில், கிராமம், நகரம் என மாறி, மாறி, எங்கள் உறவினர்கள் பதட்டத்துடன் ஆளுக்கொரு பக்கமாக எங்களைத் தேட ஆரம்பிக்க… பெரிய குழப்பமாகிப் போனது.

ஒரு வழியாக வெகுநேரம் கழித்து, ஆடி, அசைந்து, நாங்களாக வீடு வந்த சேர... அப்புறம் என்ன... பொறுப்புடன் எங்களை தேடியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வெறுப்புடன் தர்மஅடி கொடுத்தனர்.


No comments:

Post a Comment

Blogger Widgets