தொழில்.
‘பிஸ்கட்’
ஒன்றை தண்ணீரில் கரைத்து, ஒரு சிறிய டப்பாவில் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டான் அவன்.
ஆள்அரவமற்ற
தெருவில்,
வெள்ளைச்சட்டை அணிந்த ஒருவர், நடந்து
சென்றுகொண்டிருந்ததை அவன் கவனித்தான்.
அவரது
சட்டைப்பையில்
ரூபாய் நோட்டுக்கள் இருப்பது அவனுக்கு அப்பட்டமாக
தொரிந்தது.
வெள்ளைச்சட்டைக்காரரை ரகசியமாக பின்தொடர்ந்த குமார், கையிலிருந்த ‘பிஸ்கட்’
கரைசலை, அவர் அறியாவண்ணம், அவரது சட்டையின் பின்புறம்படுமாறு முதுகில் தெளித்தான்.
கொஞ்சநேரம் அவரையே
பின் தொடர்ந்த அவன், பிறகு அவரிடம் நைசாக பேச்சுக்
கொடுத்தான்.
“அண்ணே! உங்க சட்டையில்
ஏதோ ‘அசிங்கம்’
ஒட்டிக்கிட்டு இருக்கு.” அவரது கவனம் முழுமையாக சட்டையின் பின்பக்கம் செல்லும்போது, முன்புறமிருக்கும் சட்டைப்பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை லாவகமாக திருடிவிட வேண்டுமென்பது அவன்
எண்ணம்.
“ஆமாம்
தம்பி, அசிங்கமேதான்!” நின்று கவனித்து ஆமோதித்தார் அவர்.
“அண்ணே, கொஞ்சம் இருங்க… நான் தொடச்சி விடறேன்.” என்ற அவன் சுற்றும்
முற்றும் பார்த்தபடி படபடப்புடன் அவரை நெருங்கினான்.
அவர் அவசரமாக மறுத்தார்.
“வேணாம் தம்பி! உங்களுக்கு
எதுக்கு சிரமம்?
நானே வீட்டில்போய் தொடச்சு கழுவிக்கிறேன். மலத்தோட புழங்கறதுதான் என்னோட தொழிலே… என்ன பார்க்கறீங்க! வீடுகளில் இருக்கிற ‘செப்டிக் டேங்க்கை’ க்ளீன் பண்ணித்தர்றதுதான்
என்னோட வேலையே… அதைவிடுங்க, எப்படி இப்படி ஆச்சுன்னு தெரியலயே! இன்னிக்கு நான்
தொழிலுக்குக்கூட போகலயே!? ”
அவர் பேசிக்கொண்டே போக, குமாருக்கு
முகத்திலடித்தாற்ப்போல இருந்தது.
அவன் தனது ஈனத்தொழிலை கைவிட முடிவுசெய்தான்.