அடம்
அழுது அடம்பிடித்தாவது
இன்று பள்ளிக்கு
மட்டம் போட்டுவிடவேண்டுமென்றது மணிகண்டனின்
மனம்.
என்ன செய்யலாம்
என்று யோசித்தவனுக்கு ‘சட்டை அணியா போராட்டம்’ என்றொரு புதிய திட்டம்
தோன்றியது.
சீருடைச்சட்டையை அணிந்துகொள்ள மறுத்து
அடம்பிடித்தால்,
வெட்கப்பட்டு(!?) தந்தை தன்னை
பள்ளிக்கு அனுப்பமாட்டார் என்று உறுதியாக நம்பி, அவன் அந்த திட்டத்தை செயல்படுத்தினான்.
அவனுடைய தந்தை சேகர் அதற்கெல்லாம் மசியவில்லை. சட்டை அணியாவிட்டாலும் பரவாயில்லை என்று அவனை
அப்படியே தெருவில் கூட்டிக்கொண்டு போனார்.
“மணி, நானும் உன்னைப்போல இரண்டாவது வகுப்பு
படிக்கும்போது பள்ளிக்கூடத்திற்கு சட்டை இல்லாமல் போயிருக்கேன். ஆனால், காரணந்தான் வேற... எங்கப்பா ஒரு விவசாயி. ஒரு வறட்சியான காலகட்டத்தில்
வறுமையில் ரொம்ப கஷ்டப்பட்டோம். சட்டை வாங்கக்கூட காசு இல்லையின்னு எங்கப்பா என்னை
பள்ளிக்கூடத்துக்கு போக வேண்டான்னுட்டார். ஆனாலும்,
நான் சட்டைகூட போடாமல் பள்ளிக்கூடத்துக்குப் போனேன். ஏன் தெரியுமா? மதிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை வாங்கி சாப்பிடறதுக்காக… எங்க வாத்தியார் அவரோட கைக்காசைப்போட்டு சட்டை வாங்கிக்கொடுத்தார். அப்புறம் கொஞ்சம், கொஞ்சமாக கல்வியோட அருமை
புரிஞ்சு,
படிச்சு இன்னைக்கு நல்ல வேலையில் இருக்கேன்.
உனக்கு எல்லா
வசதிகளும் இருந்தும் இப்படி அடம் பிடிக்கிறாயே…!”
தந்தையின்
வருத்தம் மகனை பாதிக்கவில்லை.
“அப்பா,
நாளையில் இருந்து ஒழுங்காக போறேன். இன்னைக்கு ஒருநாள்
மட்டும்’ ‘லீவு’ போட்டுக்கிறேன். ப்ளீஸ்ப்பா…”
மகனுடைய
கோரிக்கையை மறுத்து, சட்டை அணியாவிட்டாலும் பரவாயில்லை என்று அவனை
வலுக்கட்டாயமாக அவனது வகுப்பில் தள்ளினார் சேகர்.
அங்கே கண்ட காட்சி
மணிகண்டனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அங்கே அவனுடைய
சகமாணவர்கள் சட்டை அணியாமல் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
“சார்,
பசங்களுக்கு தோல்நோய் ஏதும் இருக்கான்னு ‘செக்’
பண்றோம். உங்க பையனையும் வரிசையில் நிக்கச்சொல்லுங்க…” என்றார் வகுப்பாசிரியர்.
சேகர்
மகனைப்பார்த்து சிரித்தார்.