கா…தல்
பெண்காகம் ஒன்று, அது
வழக்கமாக உட்காரும்
மின்கம்பியில்
அமர்ந்து ஒய்டுவடுத்துக் கொண்டிருந்தது. ஆண்காகம் ஒன்று பறந்து வந்து, அருகிலிருந்த மற்றொரு மின்கம்பியில் அமர்ந்தது.
இளமையின் வாயிலில்
அப்போதுதான் நுழைந்திருந்த அவ்விரு காகங்களிடையே, கண்டதும் காதல் தீ பற்றிக் கொண்டது. அவை மகிழ்ச்சியில் கா காவென கரைந்தன.
“காதல் எவ்வளவு
உன்னதமானது! மனிதர்களாகட்டும், விலங்குகளாகட்டும், பறவைகளாகட்டும் காதல் இயற்கையின் முதல் விதி என்பதை
யாராலும் மறுக்க முடியாது.”
ஆண்காகம், அதன் அலகால்,
பெண்காகத்தின் அலகை மென்மையாகக் கொத்திவிளையாட முயன்றது.
கம்பிகளுக்கிடையே இருந்த இடைவெளி காரணமாக அந்த முதல் முத்த முயற்சி தோல்வியில்
முடிந்தது.
“முத்தம் எவ்வளவு
அற்புதமானது! மனிதன் முத்தமிட்டுக் கொள்வதை பறவைகளிடமிருந்துதான்
கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.”
அந்த காகங்கள்
கடுமையாக முயன்று ஒன்றையொன்று கூடியமட்டும் நெருங்கி அலகுகளால் தொட்டுக்கொண்டு
முதல் முத்தத்தை அனுபவித்தன.
“அவற்றின் உடலில்
மின்சாரம் பாய்வதுபோல் இருந்தது. முதல் காதல்
ஸ்பாரிசத்தில் அப்போதே இறந்துவிட வேண்டுமென்ற உன்னதநிலையை அவை
அடைந்திருக்கக் கூடும்.”
மறுநொடியில்
அவற்றின் உடல்கருகி, கால்கள் மின்கம்பிகளை
இறுகப்பிடித்தபடி தலைகீழாய் தொங்கின.