கம்பீரம்
வர்த்தக கண்காட்சியில்
கூட்டம் அலைமோதியது. மக்களை கவர்வதற்காக
ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மிகப்பெரிய மீசை கொண்டவர்களுக்கான போட்டி நேரம் அது.
பெரிய, பெரிய மீசையோடு ஏழு பேர் மேடையில் இருந்தனர். அவர்களில் 82 வயது முதியவரும் அடக்கம்.
போட்டியை நடத்திக்கொண்டிருந்தவர், விவேகமாகவும்,
நகைச்சுவையாகவும் பேச, கூட்டம் ஆர்ப்பரித்தது.
பிறகு அவர், போட்டியாளர்களை ஒவ்வொருவராக சுயஅறிமுகம் செய்துகொள்ள அனுமதி தந்தார். போட்டியாளார்களின் தோற்றத்திற்கு தகுந்தவாறு கமென்ட் அடித்து பார்வையாளர்களை
குஷிப்படுத்தினார்.
“இதோ வந்துவிட்டார்... சிங்கம் சூர்யா.”
“இதோ வந்துவிட்டார்... தேவர்மகன் கமல்.”
82 வயது பெரியவரின் முறை வந்தது.
“அனைவருக்கும் வணக்கம். என் பெயர்
திரிசங்கு.” என்று தன்னை சுயஅறிமுகம்
செய்துகொண்டார்
பெரியவர்.
“அதுதான் இன்னும் சங்கு ஊதக்கானோமே...”
பெரியவரின் முதுமையை மனதில்கொண்டு கமென்ட் அடித்தார் போட்டி தொகுப்பாளர்.
பார்வையாளர்களின் சிரிப்பால் அரங்கம் அதிர்ந்தது. ஒருசிலர் முகம் சுழித்தனர்.
பெரியவருக்கு ‘சுருக்’
என்று மனதில் தைத்தது.
போட்டியின்
முடிவில் பெரியவருக்கு இரண்டாம் பரிசாக ‘மிக்ஸி’ கிடைத்தது.
போட்டி தொகுப்பாளர், பெரியவரை தனியாக அழைத்துச்
சென்று பேசினார்.
“ஐயா,
என்னை மன்னச்சிருங்க! யோசிக்காமல் உங்க மனசை புண்படுத்தும்விதமாக
கமென்ட் அடிச்சிட்டேன்.”
“விடுங்க தம்பி, அதை நான் பெரிசா எடுத்துக்கலை…”
பெரியவரின் புன்னகை, பெரிய முரட்டு மீசை தந்த கம்பீரத்தைவிட, கூடுதல் கம்பீரத்தைத் தந்தது.