ads

Thursday, February 6, 2014

திக்… திக்… தீம்பார்க் - அனுபவம்



திக்திக்தீம்பார்க்

இது ஏதோ தீம்பார்க் ஒன்றில், நான் திக்.. திக்… என்று திகிலுடன் கழித்த அனுபவத்தை சொல்லப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். விஷயமே வேறு.
சில வருடங்களுக்கு முன்பு, நான் கல்லூரியில் படிக்கும்போது, தீம்பார்க் ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். செயற்கை கடல், செயற்கை அருவி, ராட்சஷ ராட்டினங்கள், நீர் சறுக்கு விளையாட்டுக்கள், ரோலார் கோஸ்ட்டர்... என பலப்பல அருமையான விஷயங்கள். மகிழ்ச்சியான பொழுதுபோக்கை அந்த தீம்பார்க் தந்தது.
சில வாரங்களுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய அலைபேசி வழி போட்டியில் என் சகோதரிக்கு பரிசு கிடைத்தது. நாங்கள் சென்று வந்திருந்த தீம்பார்க்கிற்கான இரண்டு இலவச அனுமதிச்சீட்டுதான் அது.
அது பரிட்சை நேரம் என்பதாலும், அப்போதுதான் அந்த தீம்பார்க்கிற்கு சென்று வந்திருந்ததாலும், வீட்டில் யாருக்கும் அங்கு செல்ல விருப்பமில்லை. எனக்கு மட்டும் அந்த வாய்ப்பை விட்டுவிட விருப்பமில்லை. குறிப்பிட்ட நாளில் நான் அங்கு உறுதியாக செல்லவிருப்பதை தெரிவித்து விட்டேன். கடைசி நேரத்தில் என் குடும்பத்தினர் யாரேனும் என்னுடன் வரக்கூடும் என்பது எனது நம்பிக்கை.
என் நம்பிக்கை பொய்த்துவிட, குறிப்பிட்ட நாளில் அவசரமாய் நண்பர்கள், உறவினர்கள் என ஒருசிலரிடம் உடன்வருமாறு கேட்க, கடைசி நேரத்தில் கேட்டமையால், அவர்களும் மறுத்துவிட்டனர். வேறுவழியின்றி நான் மட்டும் தீம்பார்க்கிற்கு சென்றேன்.
தீம்பார்க்கின் நுழைவு வாயிலில் இருந்த பணியாளருக்கு திக்கென்றது. தனியாக வந்த என்னை அனுமதிப்பதா, வேண்டாமா என அவருக்கு குழப்பம். அவரிடம் என் சூழ்நிலையை விளக்கினேன். அவர் தனது மேலதிகாரியுடன் ஆலோசித்துவிட்டு, அரைமனதாய் என்னை அனுமதித்தார்.
அகில உலக சரித்திரத்திலேயே தீம்பார்க் ஒன்றிற்கு தன்னந்தனியாக சென்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
வழக்கமாய் அங்கு வருபவர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு உதவவும் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் அனைவரிடமும், தன்னந்தனியாக வந்திருக்கும் என்னைப் பற்றிக் கூறி, என்னை பிரத்யேகமாக கண்காணிக்கும்படியாக கூறியிருப்பார்கள் போலும். பணியாளர்களின் திக்...திக்... பார்வையில் என்னால் அதை உணர முடிந்தது. தனிமை என்றும் சந்தேகத்திற்குரியதுதானே!?
தனிமை போரடிக்க, சங்கடத்துடன் எனக்குப் பிடித்த நீர் சறுக்கு விளையாட்டை மட்டும் சிறிது நேரம் விளையாடிவிட்டு வீடு திரும்பினேன்.
அடுத்த கோடைவிடுமுறையில் மீண்டும் குடும்பத்துடன் அங்கு சென்று மகிழ்வுற்றோம்.
 




Blogger Widgets