ads

Thursday, February 6, 2014

போர் - சிறுகதை



போர்

புத்திப்போர்

கருணைக்கொலை செய்வது பாவம்தான் என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தும் சிறுகதையை படித்ததிலிருந்து, ராஜாவுக்கு மனஅழுத்தம் மேலும் அதிகமானது.
தீராதநோயில் விழுந்து, பல மாதங்களாக அவதிப்பட்டு இறந்த, காதல் மனைவியை, நினைவுபடுத்தும் பொருட்களையெல்லாம், நீலநிறப்பை ஒன்றில் சேகரித்துக்கொண்டு ஊரின் எல்லையை நோக்கி பயணமானான் ராஜா.

மனப்போர்

“ராசா வயிறு பசிக்குதா?”
ராசான்னு சொல்லாதே... ராஜான்னு சொல்லு.
வயிறு வலிக்குதா?”
தெரியலை. வயிறு பசிக்குதா, வயிறு வலிக்குதான்னே தெரியலை. ஆனால் வயித்துல ஏதோ கோளாறு இருக்கு.
 அது சரி. இன்னிக்கு சரக்கு வாங்க பணமில்லையே! என்ன செய்யறது?”
 தெரியலை. ஆனால் கண்டிப்பா ஏதாவது வழி பிறக்கும். எல்லாமே விதிப்படிதான் நடக்கும்.
வழி பிறந்திடிச்சு. அதோ துரத்தில் யாரோ வர்றமாதிரி தெரியுது…
ஆமாமா... தனியா ஒருத்தன் வர்றான். வசமா மாட்டிக்கிட்டான். கையில் ஏதோ பை வச்சிருக்கான்.
கொஞ்சம் இரு. ஆள் வாட்டசாட்டமா இருக்கானே! சமாளிக்க முடியுமா?”
சரக்கு வாங்கணுமே! வர்றான்...
கத்தி வச்சிருக்கியா?”
பெரிய கத்தி இருக்கு. சின்னதும் இருக்கு.
இது எத்தனாவது ஆள்?”
பதிமூணு இல்லை. பதனாலு ஏய், கணக்கெல்லாம் பார்க்காதே. கணக்கு பார்க்கிறது பாவம்.
தெம்பு இருக்கா?”
சரக்கு வாங்கணுமே... நெருங்கி வர்றான்...
ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது. இன்னிக்கு ஏதோ தப்பா நடக்கப்போகுது.
இங்கதான் வர்றான். மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்து திடீர்னு பாய்ஞ்சு கத்தியால ஒரே குத்து.
இரு. வயித்துல ஏதோ கோளாறுன்னு சொன்னே!?”
இப்போதைக்கு சமாளிக்கமுடியும். அப்புறமா சரக்கடிச்சா சரியாப்போயிடும்.
 ஆமாமா, சரக்கடிச்சா சரியாப்போயிடும். அன்னிக்கு சட்டுன்னு நொடியில் சரியாப்போச்சே! பயமாயில்லை?”
 இல்லை.






உயிர்ப்போர்

நிழலசைவில் உள்ளுணர்வு எச்சரிக்க சட்டென்று நகர்ந்தான் ராஜா.
ஏதோ ஒன்று இடித்து, அவன் கொண்டுவந்த நீலநிறப்பை கீழே விழுந்து அதிலிருந்த பொருட்களனைத்தும் சிதறின.
 தன்னை நோக்கி பாய்ந்த உருவம் கீழே விழுந்து கிடப்பதையும், அதன் கையில் கத்தி இருப்பதையும் கண்ட அவன் பதட்டமானான். ஆனாலும் அந்த உருவத்தின் ஒடிசலான தேகம் கண்டு பயம் விலகி தன்னை ஆசுவாசப்படித்திக் கொண்டான்.
நோக்கம் நிறைவேறாமல், தவறி கீழே விழுந்த ராஜா, எழுந்து மீண்டும் வெறியுடன் பாய்ந்தான்.
 அவனை உறுதியாக தடுத்த ராஜா, கத்தியை வெகுலாவகமாக தட்டிப்பறித்தான்.
கத்தியை பறிகொடுத்த ராஜா, ஆங்காங்கே கிழிந்திருந்த சட்டையை விலக்கி, இடுப்பிலிருந்த மற்றொரு கத்தியை எடுத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாய்ந்தான்.
ராஜாக்கள் இருவரும் கத்தியுடன் சண்டையிட்டனர்.
முடிவில் ஒரு ராஜா, அதிக வலியில்லாமல் சில நொடிகளுக்குள் இறந்தான்.
அந்த சில நொடிகளில் மனஅழுத்தம் குறைவதை அவனால் உணரமுடிந்தது.
Blogger Widgets